இந்தியக் காடுகளும் சட்டங்களும் (FOREST ACTs IN INDIA)

 ஆங்கிலேயர் காலத்தில் ரயில்வே துறையின் கட்டமைப்பிற்காக காடுகள் பெருமளவில் அழிக்கப்பட்டன.காடுகளின் பயன்பாட்டினைப் பெறுவதற்கு ஏற்றவாறு சட்டங்கள் முதன்முதலில் உருவாக்கப்பட்டன.


1864-வனத்துறை உருவாக்கப்பட்டது 

1865-வனச்சட்டம் ( FOREST ACT,1865) இயற்றப்பட்டது

இச்சட்டம் மரங்கள் சூழ்ந்த எந்த ஒரு நிலத்தையும் காடாக அறிவிக்க அரசுக்கு அதிகாரம் வழங்கியது.அவ்வாறு அறிவிக்கப்பட்ட காடுகளை மேலாண்மை செய்யும்போது அங்கு வாழும் தனி நபர் அல்லது சமூகங்களின் உரிமைகள் பாதிக்கப்படகூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டது.

1878-வனச்சட்டம் 1878

இச்சட்டம் 1865 இல் இயற்றப்பட்டசட்டத்தை விட விரிவானது.இச்சட்டம் காடுகளைக் காப்புக் காடுகள் (RESERVED FORESTS),பாதுகாக்கப்பட்ட காடுகள் (PROTECTED FORESTS),கிராமக் காடுகள் (VILLAGE FORESTS) என்று மூன்றாக வகைப்படுத்தியது.

1894-வனக் கொள்கை (FOREST POLICY) உருவாக்கப்பட்டது

இக்கொள்கை காடுகளை நான்காக வகைப்படுத்தியது

1) தட்ப வெட்ப நிலைக்காகப் பாதுகாக்கப்படும் காடுகள்.

2) வணிகப் பயன்பாட்டிற்காக வெட்டு மரம் (TIMBER) தரும் காடுகள்.

3) சிறு காடுகள் (MINOR FORESTS)

4) மேய்ச்சல் நிலங்கள் (PASTURE LANDS) 

1927-வனச்சட்டம் 1927 காடுகளின் மீதான சமுகத்தின் உரிமைகளை நீக்கியது. 


விடுதலைக்குப்பின் 

1952-வனக் கொள்கை 1952

1894 வனக் கொள்கையில் குறிப்பிடாத பழங்குடியினர் நிலங்களும் இதன் கீழ் கொண்டுவரப்பட்டது.மேய்ச்சலுக்கு வரி போடப்பட்டது

1960-குடியரசுத்தலைவரால் திபார் குழு (DHEBAR COMMISSION) அமைக்கப்பட்டது

அக்குழு பழங்குடியினர் வாழ்க்கையில் காடுகளின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டியது.வனக் கொள்கை 1952 மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்றும்,பழங்குடியினர் காடுகளில் வேளாண்மை செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரை செய்தது.

1966-இந்திய வனப்பணி (INDIAN FOREST SERVICE) ஏற்படுத்தப்பட்டது

1976-42 வது சட்டத்திருத்தத்தின் மூலம் காடுகள் என்ற பிரிவு மாநிலப்பட்டியலிருந்து பொது பட்டியலுக்கு மாற்றப்பட்டது.இதன் மூலம் காடுகள் மீதான நடுவண் அரசின் அதிகாரம் கூடியது.

1980-வனச்சட்ட முன்வடிவு (FOREST DRAFT BILL) கொண்டுவரப்பட்டது

காடுகளின் மீதான மக்களின் உரிமையைக் குறைப்பதாக இச்சட்டம் முன்வடிவு இருந்தது.மேலும் இச்சட்ட முன்வடிவின்படி நடுவண் அரசின் அனுமதி இல்லாமல் எந்த ஒரு காட்டையும் காப்பு காடாக அறிவிக்க மாநில அரசுக்கு அதிகாரம் கிடையாது.இது மாநில அரசுகளின் எதிர்ப்புக்கு உள்ளானதால் திரும்பப் பெறப்பட்டது.

1982-வனக்கொள்கையின் மறுசீரமைப்பிற்காக ராய் பர்மன் (Dr.B.K.ROY BURMAN) குழு அமைக்கப்பட்டது

இக்குழு காடுகளின் உருவாக்கத்திற்கும்,பாதுகாப்பிற்கும்,மேலான்மைக்கும் சமுகத்தின் பங்களிப்பே தொலைநோக்கு தீர்வு எனக் கருதியது

1985-வனத்துறை வேளாண் அமைச்சகத்திலிருந்து புதிதாக உருவாக்கப்பட்ட சுற்று சூழல் மற்றும் காடுகள் அமைச்சகத்திற்கு மாற்றப்பட்டது 

1988- சுற்று சூழல் அமைச்சகம் உருவாக்கிய தேசிய வனக்கொள்கைத்தீர்மானத்திற்கு (NATIONAL FOREST POLICY RESOLUTION) நாடாளுமன்றம் தனது ஒப்புதலை அளித்தது.அத்தீர்மானத்தின் அடிப்படையில் வனச்சட்டம் 1988 உருவாக்கப்பட்டது.