இந்திய ஐந்தாண்டுத் திட்டங்கள்

 இந்திய திட்டக் குழு என்பது இந்திய ஐந்தாண்டுத் திட்டங்கள், ஆண்டுத் திட்டங்கள் முதலியவற்றைத் தீமானிக்கும் இந்திய அரசின் ஒரு அமைப்பாகும்.


1950 மார்ச் 15ம் நாள் இந்திய நாடாளுமன்றத்தால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாட்டின் வளங்களைக் கணக்கிட்டும், குறைவான வளங்களைப் பெருக்கியும், சமச்சீரான வகையில் அதைப் பயன்படுத்த திட்டமிடுவதே இதன் முக்கிய பணியாகும். ஜவகர்லால் நேரு இதன் முதல் தலைவராவார்.

1951ல் முதல் ஐந்தாண்டுத் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து தொடர்ந்து இரண்டு ஐந்தாண்டுத் திட்டங்கள் போடப்பட்டது ஆனால் இந்தியா பாக்கிஸ்தான் போரால் 1965ல் தடைபட்டது. அடுத்த இரண்டாண்டுகள் வரட்சியும், நாணய மதிப்பிழப்பும், விலையேற்றமும், வளம் குன்றலும் ஐந்தாண்டுத் திட்டங்களுக்கு இடையூராகயிருந்தது. அடுத்து மூன்று ஆண்டுத் திட்டங்கள் 1966 முதல் 1969 வரை போடப்பட்டு, நான்காவது ஐந்தாண்டுத் திட்டம் 1969ல் தொடங்கப்பட்டது.

1990-91ல் நிலையில்லாத, அடிக்கடி மாற்றிக்கொண்டிருந்த மத்திய அரசியலால் எட்டாவது ஐந்தாண்டுத்திட்டம் 1990ல் தொடங்கப்படவில்லை. அதனால், 1990-91 மற்றும் 1991-92 ஆண்டுகளை ஆண்டுத் திட்டமாக எடுத்துக் கொள்ளப்பட்டது. 1992ல் எட்டாவது ஐந்தாண்டுத் திட்டம் அறிவிக்கப்பட்டது. முதல் எட்டு ஐந்தாண்டுத் திட்டங்களும் பொதுத் துறையில் கவனம் செலுத்தப்பட்டு அடிப்படை மற்றும் கனரக தொழிலில் முதலீடு செய்யப்பட்டது ஆனால் ஒன்பதாவது ஐந்தாண்டுத் திட்டத்திலிருந்து பொதுத் துறையில் கவனம் குறைக்கப்பட்டு, தற்போது பொதுவான தேசிய வளர்ச்சியை நோக்கித் திட்டமிடப்படுகிறது.

அமைப்பு

மான்டெக் சிங் அலுவாலியா, தற்போதைய திட்டக் குழுவின் துணைத்தலைவர், திட்டக் குழுவின் தலைவராக நாட்டின் பிரதமரும், நியமன அடிப்படையில் மத்திய அமைச்சருக்கு நிகரான துணைத் தலைவரும், இதர துறை சார்ந்த நிரந்தர உறுப்பினர்களும் மற்றும் பகுதிநேர உறுப்பின்ர்களும் இதன் அங்கத்தவர்களாவார்கள். பொருளாதாரம், தொழிற்துறை, அறிவியல் மற்றும் பொது நிர்வாக வல்லுனர்களே நிரந்திர உறுப்பினர்களாகவும், முக்கிய அமைச்சகத்தின் அமைச்சர்கள் பகுதிநேர உறுப்பினர்களாகவும் செயல்படுவார்கள்.

பணிகள்

1950ல் இந்திய அரசு கொண்டுவந்த தீர்மானத்தின் படி திட்டக்குழுவின் பணிகள் பின்வருவன.

1. தொழில்நுட்ப பணியாளர்கள் உட்பட நாட்டின் பொருள், மூலதனம் மற்றும் மனித வளங்களை அடையாளங்கண்டு நாட்டின் தேவைக்குக் குறைவானவற்றை அதிகரிக்கச் செய்தல்

2. நாட்டின் வளங்களை மிகவும் பயனுள்ள மற்றும் சமச்சீரான பயன்பாட்டுக்கு ஏற்படி திட்டமிடல்.

3. முன்னுரிமைகளின் அடிப்படையில் வளங்களை ஒதிக்கீடு செய்து திட்டமிட, கட்டங்களை வரையறை செய்தல்.

4. பொருளாதார வளர்ச்சியைத் தாமதப்படுத்தும் காரணிகளை அடையாளம் காட்டுதல்.

5. திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்கான தக்க சமூக மற்றும் அரசியல் நிலைமைகளைத் தீர்மானித்தல்.

6. திட்டத்தின் வெற்றிகரமான ஒவ்வொரு நிலைக்கும் தேவைப்படும் போதிய இயந்திரஙகளைக் கண்டறிதல்.

7. ஒவ்வொரு கால நிலையிலும் திட்ட வளர்ச்சியை மதிப்பீடு செய்து, மேலும் வெற்றிக்குத் தேவையான அளவீடு மற்றும் கொள்கை ரீதியாக ஆலோசனை வழங்குதல்.

8. மத்திய, மாநில அரசுகளின் பிரச்சனைகளை ஆராய்ந்து, அல்லது நடப்பு பொருளாதார நிலை, கொள்கை, வளர்ச்சித் திட்டங்களின் சாதகநிலைக்கேற்ப இடைக்கால அல்லது துணைப் பரிந்துரைகள் அளித்து வளர்ச்சியை சீராக்குதல்.
திட்டக் குழு

அமைப்பு மேலோட்டம்

அமைப்பு தலைமை, தலைவர்-
 துணைத் தலைவர்-

மூல நிறுவனம் இந்திய நிதி அமைச்சகம் இணையத்தளம் www.planningcommission.nic.in

முதலாம் ஐந்தாண்டுத் திட்டம்:(1951-1956)

இந்திய அரசு ,தனது முதலாம் ஐந்தாண்டுத் திட்டத்தில் , உணவு உற்பத்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது.விவசாயம் மற்றும் சமுதாய மேம்பாடு, பாசனம் மற்றும் மின்னுற்பத்தி, போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்புத் துறை, சமூக சேவைகள் மற்றும் புனர்வாழ்வு ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்துவதே முதல் திட்டத்தின் முக்கிய நோக்கமாக இருந்த்தது.

இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டம் (1956-1961)

கிராமப் புற இந்தியாவை சீரமைத்தல் , தொழல் துறை வளர்ச்சிக்கான அடிக்கல்லை நாட்டுதல், பின்தங்கிய மக்களின் வளர்ச்சிக்காக அதிக பட்ச வாய்ப்புகளை உருவாக்குதல் மற்று நாட்டின் அனைத்துப் பகுதிகளும் ஒரே சீராக வளர்ச்சி அடைவதை உறுதிசெய்தல் ஆகியவை இத்திட்டத்தின் நோக்கங்களாக இருந்தன.

மூன்றாம் ஐந்தாண்டுத் திட்டம்(1961-1966)

முதல் மற்றும் இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டங்களின் நீட்சியாக இத்திட்டம் அமைந்தது.மேலும் நான்காவது ஐந்தாண்டுத் திட்டத்தை நோக்கி இந்திய மக்களை இட்டுச்செல்லும் வழிகாட்டியாகவும் இது அமைந்தது.

நான்காம் ஐந்தாண்டுத் திட்டம்(1969-1974)

மக்களின் வாழ்க்கைத் தரத்தை- குறிப்பாக பின்தங்கிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை- உயர்த்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம்.உற்பத்தியைப் பெருக்குவது மட்டுமின்றி ஈட்டப்பட்ட செல்வத்தை மக்கள் அனைவருக்கும் சமமாகப் பிரித்து வழங்குவதும் முதலிடத்தைப் பெற்றன.நாட்டின் செல்வமும் பொருளாதார சக்தியும் சில இடங்களில் மட்டுமே குவிந்திருக்காமல் அவற்றைப் பரவலாக்குவது தலையாய பனி ஆயிற்று.

ஐந்தாம் ஐந்தாண்டுத் திட்டம்(1974-1979)

உலக அளவில், உணவுப் பொருட்கள், உரம் போன்ற விவசாய இடுபொருட்கள் மற்றும் எண்ணெய் ஆகியவற்றின் விலைகள் பெரிதும் உயர்ந்தன. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவது அவசரத்தேவையாக இருந்தது.1974-75 இன் மத்தியில் இந்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் பிற நாடுகளின் கவனத்தை ஈர்த்தது.

ஆறாம் ஐந்தாண்டுத் திட்டம் (1980-1985)

வறுமை, வேலை இல்லாத் திண்டாட்டம் மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகள் ஆகியவற்றைக் களைதல் ஆகியவை இத திட்டத்தில் முதலிடம் பெற்றன.

ஏழாம் ஐந்தாண்டுத் திட்டம் (1985-1989)

உணவு தானிய உற்பத்தி,வேலை வாய்ப்பைப் பெருக்குதல் மற்றும் மக்களின் உற்பத்தித் திறனைப் பெருக்குதல் போன்றவை முக்கியத்துவம் பெற்றன.

எட்டாம் ஐந்தாண்டுத் திட்டம் (1992-1997)

உணவு உற்பத்தியில் இந்திய நாடு ஏறத்தாழ தன்னிறைவு அடைந்துவிட்டது. தொழில் துறை மற்றும் சேவை வழங்கும் துறைகளும் நன்கு முன்னேறி இருந்தன. ஆனால் நிதிப்பற்றாக்குறை, பொதுக்கடன் , நலிந்து வரும் அந்நியச் செலாவணி கையிருப்பு மற்றும் அதிகரித்து வரும் பணவீக்கம் ஆகியவற்றை எதிர்த்துப் போரிட வேண்டிய அவசியம் உருவாகி விட்டது. எட்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் கீழ்காண்பவை முன்னுரிமை பெற்றன:

1. அதிகமான அளவில் வேலைவாய்ப்பினை உருவாக்குவதன் மூலம் இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் முழு அளவு வேலைவாய்ப்பினை எட்டுதல்

2. மக்களின் ஒத்துழைப்பின் மூலமும் ஊக்கத்திட்டங்கள் மற்றும் ஊக்கத்தொகைகளை விளக்கிக்கொள்ளுதல் ஆகியவற்றின் மூலமும் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துதல்

3. அனைவருக்கும் ஆரம்பக் கல்வி அளித்தல் மற்றூம் 15 முதல் 35 வயது வரை உள்ள மக்களிடத்து காணப்படும் எழுத்தறிவின்மையைப் போக்குதல்

4. அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடி நீர் வழங்குதல்,அடிப்படை மருத்துவ வசதிகளை அளித்தல் , நோய் தடுப்பு முறைகளை அளித்தல் மற்றும் தோட்டிப் பணிகளை அற்வே ஒழித்தல்

5. விவசாய வளர்ச்சி, பல்வகைப் பயிர்களைப் பயிரிடல் மற்றும் ஏற்றுமதி செய்யக் கூடிய அளவுக்கு தானிய உற்பத்தியைப் பெருக்குதல்

6. மின்னாற்றல், போக்குவரத்து, தவகவல் தொடர்பு மற்றும் பாசனம் போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகளைப் பெருக்கி வளர்ச்சிப் பணிகளைத் தடையின்றி நீடிக்கச் செய்தல்.

ஒன்பதாம் ஐந்தாண்டுத் திட்டம் (1997-2002)

பொருளாதார வளர்ச்சிக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்துக்கும் இடையில் உள்ள ஒருங்கிணைந்த உறவை ஒன்பதாவது ஐந்தாண்டுத் திட்டம் அங்கீகரித்தது.காலங் காலமாக நிலவி வரும் சமுதாய வேறுபாடுகளைக் களைந்து ஏழை எளிய மக்களின் நல்வாழ்வுக்கு ஆதரவு அளிக்கும் கொள்கைகளை உருவாக்குவதில் அரசு உறுதியாக உள்ளது."சமூக நீதி மற்றும் சமத்துவத்துடன் இணைந்த வளர்ச்சி " என்பதே இத்திட்டத்தின் தாரக மந்திரம்.

தேசிய வளர்ச்சிக் குழு, கீழ் காண்பவற்றை ஒன்பதாவது ஐந்தானண்டுத் தித்தின் முக்கிய நோக்கங்கள் எனக் குறிப்பிட்டது.

1. வேலை வாய்ப்பைப் பெருக்குதல் மற்றும் வறுமையை ஒழிப்பு ஆகியவற்றுக்காக விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கு முன்னுரிமை அளித்தல்

2. விலைவாசிகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அதே நேரத்தில் வளர்ச்சி வேகத்தை அதிகரித்தல்

3. அனைவருக்கும் -குறிப்பாக-பின்தங்கிய சமூகத்தினருக்கு - உணவு மற்றும் சத்துணவை உறுதி செய்தல்

4. அனைவர்க்கும் பாதுகாக்கப்பட்ட குடி நீர் , அடிப்படை சுகாதார வசதிகள், அடிப்படைக் கல்வி, தங்குமிடம் ஆகியவற்றை குறித்த கால வரையறைக்குள் உறுதி செய்தல்

5. மக்கள் தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்துதல்

6. அனைத்து நிலைகளிலும் உள்ள மக்களின் ஒத்துழைப்பு மற்றும் பங்கேற்பின் மூலம் வளர்ச்சிப் பணிகளின் காரணமாக சுற்றுச்சூழல் பாதிக்கப் படாமல் காத்தல்

7. பெண்கள் மற்றும் சமுதாயத்தில் பின் தங்கிய - அட்டவனை இன மக்கள், பிற பின் தங்கிய இனத்தவர்கள் மற்றும் சிறுபான்மை இனத்தவர் ஆகியோருக்கு அதிகாரம் வழங்குதல்

8. பஞ்சாயத்து ராஜ், கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் சுய உதவிக் குழுக்கள் ஆகியவற்றில் மக்களின் பங்களிப்பை அதிகரிக்க ஊக்கப்படுத்துதல்

9. சுய சார்பை உருவாக்குவதற்கான முயற்சிகளை வலுப்படுத்துதல்.

பத்தாம் ஐந்தாண்டுத் திட்டம் (2002-2007)

பத்து விழுக்காடு வேகத்தில் உலகிலேயே மிக வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியப் பொருளாதாரத்தை மாற்றுவது இத்திட்டத்தின் நோக்கமாகும்.முதலீட்டாளர்களுக்கு இணக்கமான சந்தை சீர்திருத்தங்கள் மற்றும் வளர்ச்சிக்கு சாதகமான சூழ் நிலையை உருவாக்குதல் ஆகியவை முன்னுரிமை பெற்றன.தனியார் துறையினர் , பொருளாதார வளர்ச்சியில் துடிப்புடன் பங்கேற்பதையும் நிதித்துறையில் வெளி நாட்டினர் அதிக அளவில் பங்கேற்பதையும் அரசு வரவேற்றது. வர்த்தக நிறுவனங்கள் வெளிப்படையுடன் செயல்படுவதற்கும் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் அதிக ஊக்கம் அளிக்கப்பட்டது. வறுமையை ஒழித்தல்; கல்வியைப் பரப்புதல் ஆகியவை அதிக கவனம் பெற்றன 2007 ஆம் ஆண்டு வாக்கில் வனப்பரப்பை 25 விழுக்காடு அளவுக்கு உயர்த்துதல்; அனைத்து கிராமங்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடி நீர் வழங்குதல்.

கண்காநிக்கத்தக்க இலக்குகள்

1. வறுமையைக் குறைப்பது

2. வேலைவாய்ப்பைப் பெருக்குவது

3. 2007 ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் அடிப்படைக் கல்வியை எட்டச் செய்வது

4. மக்கள் தொகை வளர்ச்சி விகிதத்தை 16.2 விழுக்காடாகக் குறைப்பது

5. 2007 ஆம் ஆண்டுக்குள் கல்வி ஏற்றோர் எண்ணிக்கையை எழுபத்தைந்து விழுக்காடாக உயர்த்துவது

6. குழந்தை இறப்பு விகிதத்தை குறைப்பது

7. பேறுகாலத்தில் பெண்கள் இறக்கும் விகிதத்தைக் குறைப்பது

8. வனப் பரப்பை அதிகரிப்பது

9. 2012 ஆம் ஆண்டுக்குள் அனைத்து கிராமங்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்க வழி செய்தல்

10. மாசு பட்ட அனைத்து ஆறுகளையும் 2007 ஆம் ஆண்டுக்குள் தூய்மைப் படுத்துவது.

பதினோராம் ஐந்தாண்டுத் திட்டம் (2007-2012)

1. மொத்த உள் நாட்டு உற்பத்தியை பத்து விழுக்காடு அளவுக்கு உயர்த்துதல்

2. எழு நூறு இலட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் ; ஆரம்பப் பள்ளிகளில் வசதிகளை மேம்படுத்துதல்

3. குழ்ந்தை இறப்பு விகிதத்தை 28 ஆகக் குறைத்தல்; அனைத்து கிராமங்களுக்கும் மின் இணைப்பு வழங்குதல், வனப் பரப்பளவை ஐந்து விழுக்காடு புள்ளி அளவுக்கு உயர்த்துதல்.

பன்னிரண்டாம் ஐந்தாண்டு திட்டம் (2012-17)

பன்னிரண்டாம் ஐந்தாண்டு திட்டம் விரைவில் தொடங்க உள்ளது.இதற்கான் கொள்கை வரைவினை இறுதி செய்யும் முயற்சியில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளது